Monday, 24 June 2013

”ஞானம்” என்றால் என்ன?.

                                               ”ஞானம்” என்றால் என்ன?.


வணக்கம்,


”குரங்கு சாவதற்கு ஒரே ஒரு புண் போதும்
முட்டாள் சாவதற்கு ஒரே ஒரு பிரச்சினை போதும்”

என்று கிராமத்தில் ஒரு உவமான வாக்கியம் உண்டு.

காடுகளில் வாழும் குரங்குகள் பெரும்பாலும் நோய் வாய்ப்படுவதில்லை. ஆனால் அவைகளுக்கு ஒரே ஒரு புண் வந்துவிட்டால் போதும். அதை நோண்டி நோண்டிப் பெரிதாக்கித் தன்னை அழித்துக் கொள்ளும்.

அதுபோலத் தான் மனித வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை மனதிற்குள் போட்டு நோண்டி நோண்டிப் அதைப் பெரிதாக்கிக் கொள்வதும்.

அந்த குரங்கு கொஞ்சம் பொறுமையாய் புண்ணை நோண்டாமல் இருந்தாலே போதும் புண் விரைவில் ஆறிவிடும்.

இதை குரங்குக்கு சொன்னாலும் புரியாது. அது புண்ணை நோண்டுவதை நிறுத்தப்போவதில்லை.

ஆனால்,

மனிதன் புரிந்து கொள்ள முடியும் தானே?

மனித வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை மனதிற்குள் போட்டு நோண்டி நோண்டிப் அதைப் பெரிதாக்கிக் கொள்ளாமல் வாழமுடியும் தானே?

 மனிதமனம் வெறும் “மனம்” மட்டுமே… மனிதமனம் குரங்கு அல்ல… என்ற புரிந்து கொள்ளுதல் தான் ”ஞான உதயம்”.


இந்த புரிதல் எப்போதும் இயற்கையில் எதிர்பாராத தருணங்களில் நடந்து கொண்டேதான் இருக்கிறது.

இதில் புரிந்து கொள்வது எல்லாமே சீடர்கள். புரிய வைப்பவை எல்லாமே குரு. இந்த மொத்த நிகழ்வும் ”ஆன்மிகம்” எனப்படுகிறது, அவ்வளவுதான்.


     தத்தாத்ரேயர் எனும் அவதூதர் காட்டில் சுற்றிக் கொண்டிருந்த போது, யது என்ற மன்னனைச் சந்தித்தார். 

தத்தாத்ரேயர் மிக மகிழ்ச்சியாக இருந்ததைக்கண்ட அவன், அவரது மகிழ்ச்சிக்கான காரணத்தையும், அவரது குரு யார்? என்பதையும் கேட்டான்.
"எனக்கு 24 குருமார்கள் இருக்கின்றனர்...' என்றார் தத்தாத்ரேயர்.

இந்தப் பதிலைக் கேட்டு ஆச்சரியப்பட்ட மன்னன், "சுவாமி! ஒருவருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? தங்கள் பதில் வித்தியாசமாக உள்ளதே...' என்றான்.

அவனிடம், "பஞ்சபூதங்களான ஆகாயம், நீர், நிலம், நெருப்பு, காற்று, சந்திரன், புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில்பூச்சி, வண்டு, தேனீ, குளவி, சிலந்தி, யானை, மான், மீன், பருந்து, பாம்பு ஆகியவையும், நாட்டியக் காரி பிங்களா, ஒரு குழந்தை, ஒரு பணிப்பெண், அம்பு தயாரிப்பவன், சூரியன் ஆகியோரும் என் குருக்கள் ஆவர்...' என்றார் தத்தாத்ரேயர். 

மன்னன் ஏதும் புரியாமல் நின்றதைக் கண்ட தத்தாத்ரேயர் இதற்கு விளக்கமளித்தார்...

"மன்னா! பொறுமையை பூமியிடம் கற்றேன்;

தூய்மையை தண்ணீரிடம் தெரிந்து கொண்டேன்.

பலருடன் பழகினாலும், பட்டும், படாமல் இருக்க வேண்டும் என்பதைக் காற்றிடம் படித்தேன்.

எதிலும் பிரகாசிக்க வேண்டும் என்பதை தீ உணர்த்தியது;

பரந்து விரிந்த எல்லையற்ற மனம் வேண்டும் என்பதை ஆகாயம் தெரிவித்தது.

"ஒரே சூரியன் இருந்தாலும் பல குடங்களில் உள்ள தண்ணீரில் பிரதிபலிப்பது போல மெய்ப்பொருள் ஒன்றாக இருந்தாலும் மனம் பலவாறாக சிந்திப்பதை உணர்ந்தேன்.

"வேடன் ஒருவன் புறாக்குஞ்சுகளைப் பிடித்தான். அவற்றின் மீது அன்பு கொண்ட தாய்ப்புறா தானும் வலியச் சென்று வலையில் சிக்கியது. இதில் இருந்து பாசமே துன்பத்திற்கு காரணம் என்பதை உணர்ந்தேன்.

"எங்கும் அலையாமல் தன்னைத் தேடி வரும் உணவைப் பிடித்துக் கொள்வது போல, கிடைப்பதை உண்டு பிழைக்க வேண்டும் என்பதை மலைப்பாம்பிடம் கற்றேன்.

பல்லாயிரம் நதிகளை ஏற்றுக்கொள்ளும் கடல் போல, எவ்வளவு துன்பம் வந்தாலும் ஏற்கும் பக்குவத்தை கடலிடம் படித்தேன்.

பார்வையை சிதற விடாமல் ஒரே இடத்தில் மனதை செலுத்துவதை விட்டில் பூச்சி கற்றுத் தந்தது.

"எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாயிருப்பதை தாயிடம் பால் குடிக்கும் குழந்தையிடம் கற்றேன்.

பணிப்பெண் ஒருத்தி அரிசி புடைக்கும்போது வளையல்கள் உரசி ஒலி எழுப்பின; இரண்டு வளையல்களில் ஒன்றை அவள் கழற்றியதும், ஒலி அடங்கியது. 

இதில் இருந்து இரண்டு பேர் இருந்தாலும் தேவையற்ற விவாதம் ஏற்படும் என்பதைப் புரிந்து கொண்டு, தனிமையே சிறந்ததென்ற முடிவுக்கு வந்தேன்.

"பிங்களா என்ற நாட்டியக்காரி ஏற்கனவே பலரிடம் வருமானம் பார்த்தபின், இன்னும் யாராவது வரமாட்டார்களா எனக் காத்திருந்தாள். யாரும் வராததால், கிடைத்தது போதும் என்று உறங்கி விட்டாள். இதில் இருந்து ஆசையை விட்டால் எல்லாமே திருப்தியாகும் என்பதை புரிந்து கொண்டேன்.

"புற்களால் குழிக்குள் மாட்டிக்கொண்ட பெண் யானையை பார்த்த ஆண் யானை, அதன் மேல் ஆசை கொண்டு அதுவும் வீழ்ந்தது. இதில் இருந்து, பெண்ணாசையும் துன்பத்துக்கு காரணம் என்பதை உணர்ந்தேன்...' என்று ஒவ்வொரு பொருளுக்கும் விளக்கமளித்தார்.

இதைக் கேட்ட அரசன், பூரண அமைதி அடைந்தான்..

தத்தாத்ரேயர் இயற்கையிடம் கற்ற இந்த உயர்ந்த பாடம் நம் எல்லாருக்குமே பொருந்தும் தானே.. 

தத்தாத்ரேயரின் ”அவதூதகீதை”  ரமணர், ராமகிருஸ்னபரமஹம்சர் போன்ற பல மஹான்களால் சீடர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட அத்வைத கிரந்தமாகும்.  

நல்ல சீடனுக்கு எல்லாமே குரு தான்.

இப்போதைக்கு இது போதும். வாழ்க வளமுடன்.


                        டாக்டர்.சிவகுமரன்.

1 comment:

  1. pl browse blog 1008petallotus.wordpress.com - some 230 articles on suththa sanmargam and gnaanam are avl

    BG Venkatesh
    9600786642 /9677771311

    ReplyDelete