Tuesday 5 February 2013

சத்தியமே வெல்லும்!

சத்தியமே வெல்லும்!

சுவாமி விவேகானந்தர் பேசுகிறார்...



































































ஒரு சமயம் நான் காசியில் இருந்தபோது ஒரு பாதை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தேன். அந்தப் பாதையின் ஒருபுறம் நீர் நிறைந்த பெரிய குளமும், மறுபுறம் உயர்ந்த சுவரும் இருந்தன. குரங்குகள் பல உலாவும் இடம் அது. காசியின் குரங்குகள் பற்றியோ கேட்கவே வேண்டாம், மிகவும் பொல்லாதவை! இப்படி நான் நடந்து சென்று கொண்டிருக்கையில் அங்கிருந்த குரங்குகளுக்கு நான் அவ்வழியில் செல்வது பிடிக்கவில்லை போலும். நான் செல்லச் செல்ல அவை கிறீச்சிட்டுப் பெரும் சத்தமிட்டபடி என் கால்களை கௌவிக் கொண்டன. நான் தப்பித்து ஒட்டமிட்டேன், அவையும் பின்தொடர்ந்து துரத்தின. நான் வேகமாக ஒடினால் அவையும் அதைவிட வேகமாக துரத்தி வந்து என்னை கடித்தன. இதற்கு மேல் இக்குரங்குகளிடமிருந்து தப்பிக்க வழியே இல்லை என்று நான் நினைத்தபோது அவ்வழியில் வந்த ஒருவர், குரங்குகளை எதிர்த்து நில் என்று என்னைப் பார்த்து கூவினார். அவர் சொல்படி நான் திரும்பி நின்று குரங்குகளை எதிர்த்தபோது அவை பின்வாங்கி ஒட்டம் பிடித்தன. வாழ்க்கை முழுமைக்கும் இது தான் படிப்பினையாகும் - எது உன்னை அச்சம் கொள்ளச் செய்கிறதோ அதை அஞ்சாமல் எதிர்த்து நில்.









மக்கள் பொதுவாக தங்கள் வாழ்வின் குறைபாடுகளுக்கெல்லாம் மற்றவர்களே காரணம் என்று பழி சுமத்துகிறார்கள், அது முடியாவிட்டால், கடவுள் மீது பழி சுமத்துகிறார்கள். அல்லது புதிதாக பேய் பிசாசு என்று கற்பித்துக்கொண்டு அதை தலைவிதி என்று சொல்கிறார்கள்…. விதி எங்கிருந்து வந்தது? விதி என்றால் என்ன? எதை விதைத்தோமோ அதைத் தான் அறுவடை செய்கிறோம். நம் தலைவிதியை எழுதுவது நாமே தான், அதற்கு வேறு எவர் மீதும் பழிசுமத்த வேண்டியதில்லை, வேறு எவரையும் புகழவும் வேண்டியதில்லை. காற்று வீசுகிறது, எவரெவர் தத்தம் பாய்மரத்தை அதற்கு சாதகமாக வைத்துக் கொள்கிறார்களோ அவர்கள் முன்னேறுகிறார்கள். பாய்மரத்தை சுருட்டி வைத்துக் கொண்டவர்களோ எங்கும் செல்வதில்லை, இது காற்றினுடைய குற்றமா?